கோலாலம்பூர், ஏப் 25- நோன்புப் பெருநாளை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் தகுதியுள்ள மாணவர்களுக்கு எம்.எச். எக்ஸ்புளோரர் திட்டத்தின் கீழ் 35 விழுக்காடு வரை கட்டணக் கழிவை வழங்க மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.
இந்த கட்டணக் கழிவு சலுகை வரும் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அந்த விமான நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.
இந்த வரையறுக்கப்பட்ட காலச் சலுகையை அனுபவிக்க முதலில் எம்.எச். எக்ஸ்புளோரர் உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும். தற்போது அமலில் உள்ள 30 விழுக்காட்டு கட்டணக் கழிவுடன் மேலும் 5 விழுக்காட்டு கழிவை வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை பெறுங்கள் என்று அது தெரிவித்தது.
இந்த எம்.எச். எக்ஸ்புளோரர் திட்டத்தின் கீழ் 18 முதல் 26 வயது வரையிலான மாணவர்கள் ஆண்டு முழுவதும் பல்வேறு அனுகூலங்களைப் பெறுவர் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலேசியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஃபயர்பிளை விமானங்களில் 30 விழுக்காடு வரையிலான கட்டணக் கழிவு சலுகை, கூடுதலாக 10 கிலோ பொருள்களை கொண்டுச் செல்வதற்கான வாய்ப்பு, பயண தேதியை மாற்றிக் கொள்வதற்கு ஒரு முறை வாய்ப்பு, ஃபயர்பிளை விமானங்களில் 20 விழுக்காடு வரை சரக்கு கட்டண கழிவு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.


