கோலாலம்பூர், ஏப் 25- மலேசியா தற்போது மலேரியா ஜூனோட்டிக் எனப்படும் புதிய விலங்கியல் மலேரியா நோய்ப் பரவல் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டில் 376 ஆக இருந்த விலங்கியல் மலேரியா நோய்ப் பரவல் எண்ணிக்கை கடந்த 2021 ஆம் ஆண்டில் 3,575 ஆகி அபரிமித உயர்வு கண்டதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நாட்டில் மலேரியாவினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இந்த விலங்கியல் மலேரியா நோய் காரணமாக உள்ளதாக அவர் சொன்னார்.
மலேசியா தற்போது மனிதர்களுக்கு ஏற்படும் மலேரியா தவிர்த்து புதிய மற்றும் பெரிய அச்சுறுத்தலை அதாவது பிளாஸ்மோடியம் நோலெசி என்ற ஒட்டுண்ணியால் ஏற்படும் ஜூனேட்டிக் மலேரியா பாதிப்புகளை எதிர்நோக்கி வருகிறது.
காடுகளை வசிப்பிடமாக க் கொண்ட குரங்குகளைக் கடிக்கும் அனோபிலிஸ் எஸ்பி கொசுக்கள் மூலம் இந்நோய் மனிதர்களுக்கு பரவுகிறது. இது மனிதர்களுக்கு ஏற்படும் மலேரியாவைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்டது. பெரும்பாலும் இந்த நோய்த் தாக்குதல் வீட்டிற்கு வெளியே நிகழ்கிறது என்று அவர் சொன்னார்.
இன்று தேசிய நிலையில் அனுசரிக்கப்படும் மலேரியா தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
தோட்டங்களை உருவாக்குவதற்கு காடுகளை அழிக்கும் காரணத்தால் வனத்தையே வாழ்வாதாரமாக க் கொண்ட விலங்குகளுடன் மனிதர்களுக்கு ஏற்படும் தொடர்பு அதிகரிப்பினால் இந்த ஜூனோட்டிக் மலேரியா ஏற்படுகிறது என்றும் அவர் கூறினார்.


