ஷா ஆலம், ஏப்ரல் 25: சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகம் (பிகேபிஎஸ்) கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கிய ஏசான் தலையீட்டுத் திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட RM30 லட்சம் விற்பனையைப் பதிவு செய்துள்ளது.
32 மாநில சட்டமன்றத்தில் கோழி, மீன், மாட்டு இறைச்சி, முட்டை மற்றும் காய்கறிகள் போன்ற அடிப்படைப் பொருட்களின் விற்பனையின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளதாக அதன் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் முகமட் கைரில் முகமது ரசி தெரிவித்தார்.
“காய்கறிகளின் விலைப் பிரச்சினை உயர்ந்தபோது, சிலாங்கூர் ஃபுருட் வேலி (SFV) மற்றும் பிகேபிஎஸ் பண்ணைகளிலிருந்து பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்க புதிய பொருட்களைக் கொண்டு வந்தோம்.
“இந்த திட்டம் இன்று வரை பிகேபிஎஸ் வளாகம், நடமாடும் லாரிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் மூலம் தொடர்கிறது. ஒவ்வொரு நாளும் நாங்கள் சுமார் RM15,000 விற்பனையைப் பெறுகிறோம், வார இறுதி நாட்களில் கூட இந்த தொகை அதிகமாக இருக்கும், ”என்று அவர் கூறினார்.
இங்குள்ள செக்சென் 13 உழவர் சந்தையில், நவீனமயமாக்கல் மற்றும் விவசாய அடிப்படையிலான ஆட்சிக்குழு உறுப்பினர் இஸாம் ஹாஷிம் கலந்துகொண்ட மெகா மாநில அரசின் பரிவுமிக்க விற்பனைத் திட்டம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
இதுவரை கிட்டத்தட்ட 50,000 சிலாங்கூர் குடியிருப்பாளர்கள் இந்த திட்டத்தால் பயனடைந்துள்ளனர் என்றும் டாக்டர் முகமட் கைரில் தெரிவித்தார்.
இதேவேளை, நாளை முதல் மே மாதம் 2ஆம் திகதி வரை 29 இடங்களில் நடைபெறவுள்ள விற்பனைத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
“வேறெங்கும் கிடைக்காத மலிவான விலையில் ஹரி ராயா தேவைகளை வாங்க வருமாறு மக்களை அழைக்கிறேன்.
மாநில அரசும், பி.கே.பி.எஸ். அமைப்பும் அளித்த வாய்ப்பை பயன்படுத்தாவிட்டால், நஷ்டம் தான்,'' என்றார்.


