ANTARABANGSA

தப்பியோடிய 171 ரோஹிங்கியா கைதிகளைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

20 ஏப்ரல் 2022, 12:46 PM
தப்பியோடிய 171 ரோஹிங்கியா கைதிகளைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

அலோர்ஸ்டார், ஏப் 20- சுங்கை பாக்காப் குடிநுழைவுத் துறை தடுப்புக் காவல் முகாமிலிருந்து தப்பியோடிய ரோஹிங்கியா சட்டவிரோதக் குடியேறிகளில் இன்னும் தலைமறைவாக இருக்கும் 171 பேரை தேடும் நடவடிக்கையை கெடா மாநில போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

நேற்று அதிகாலை 4.30 மணியளவில் அந்த முகாமிலிருந்து தப்பி இன்னும் தலைமறைவாக இருக்கும் 171 பேரை கண்டறிவதற்காக ஓப்ஸ் கெசான் இயக்கத்தை தாங்கள்  தொடக்கியுள்ளதாக கெடா மாநில போலீஸ் தலைவர் வான் ஹசான் வான் அகமது கூறினார்.

தப்பியோடியவர்களில் 131 ஆண்கள், 28 பெண்கள் மற்றும் 12 சிறார்களும் அடங்குவர் என்று இன்று மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில்  அவர் தெரிவித்தார்.

இந்த தேடுதல் நடவடிக்கையில் பினாங்கு, பேராக் மாநில காவல் துறையினரோடு குடிநுழைவுத் துறை, சிறப்பு நடவடிக்கைப் பிரிவு மற்றும் போலீஸ் துறையின் கே-9 எனப்படும் மோப்ப நாய்ப் பிரிவும் ஈடுபடுத்தப்படும் என்று அவர் சொன்னார்.

செபெராங் பிறை செலாத்தான் பண்டார் பாருவில் தலா நான்கு சாலைத் தடுப்புச் சோதனைகளும் கூலிமில் ஐந்து சாலைத் தடுப்புச் சோதனைகளும் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அந்த தடுப்புக் காவல் மையத்திலிருந்து தப்பிய 528 கைதிகளில் 357 பேர் மீண்டும் பிடிபட்ட வேளையில் ஆறு பேர் தப்பியோடும் போது வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் கார்களால் மோதுண்டு உயிரிழந்தனர்.

தப்பியோடிய அந்த அந்நிய சட்டவிரோதக் குடியேறிகளுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டாம் என பொது மக்களைக் கேட்டுக் கொண்ட அவர், அவ்வாறு செய்வது சட்டப்படி குற்றமாகும் என்று எச்சரித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.