பெட்டாலிங் ஜெயா, ஏப் 20- சீ போட்டியை முன்னிட்டு இங்குள்ள விஸ்மா எஃப்.ஏ.எம்.மில் நடைபெறும் மைய பயிற்சியில் பங்கேற்கும்படி 23 வயதுக்குட்பட்ட அணியின் 31 விளையாட்டாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் வெறும் ஐந்து ஆட்டக்காரர்கள் மட்டுமே நேற்றிரவு ஆஜராகினர்.
சிக் இஸான் நஸ்ரில் சிக் அஸ்மான், முகமது ஃபஹாமி டேனியல் முகமது ஜாயிம், முகமது பாயிஸ் அமீர் ருன்னிஸார், முகமது ஷாபி அஸ்வாட் சபாரி, முகமது ஹக்கிம் அஸிம் ரோஸ்லி ஆகியோரை அந்த ஐந்து விளையாட்டாளர்கள் ஆவர்.
எனினும், தற்போது நடைபெற்று வரும் சூப்பர் லீக் மற்றும் பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்று வரும் இதர ஆட்டக்காரர்கள் இன்னும் சில தினங்களில் பயிற்சிக்கு திரும்புவர் என தாம் எதிர்பார்ப்பதாக தலைமை பயிற்றுநர் ப்ராட் மேலோனி கூறினார்.
அந்த விளையாட்டாளர்கள் சார்ந்துள்ள கிளப்புகள் அவர்களை விடுவிக்க மறுப்பதற்கான சாத்தியமும் உள்ளது. இதன் தொடர்பில் நாங்கள் சம்பந்தப்பட்ட கிளப்புகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம். விரைவில் அவர்கள் பயிற்சியில் பங்கேற்பார்கள் என நம்புகிறேன் என்றார் அவர்.
மலேசிய கால்பந்து சங்கம் சிறந்த குழுவை ஒருங்கிணைக்கும் பட்சத்தில் வரும் மே மாதம் 12 தொடங்கி 23 ஆம் தேதி வரை ஹனோயில் நடைபெறும் சீ போட்டியில் தேசிய குழு சாதனை படைப்பதற்குரிய சாத்தியம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


