அலோர் ஸ்டார், ஏப் 20- மக்காவ் மோசடியில் சிக்கி நிறுவனம் ஒன்றின் பெண் நிர்வாகி ஒருவர் 12 லட்சம் வெள்ளியைப் பறிகொடுத்தார்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் தன்னை ஒரு காப்புறுதி முகவராக அறிமுகப்படுத்திக் கொண்ட மோசடி பேர்வழியிடம் அவர் அத்தொகையைப் பறிகொடுத்ததாக கெடா மாநில வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் சூப்ரிண்டெண்டன் எலியாஸ் ஒமார் கூறினார்.
கூலிமைச் சேர்ந்த 46 வயதுடைய அந்த நிர்வாகியை தொலைபேசி வழி தொடர்பு கொண்ட சபரினா என்ற பெண், தாம் காப்புறுதி நிறுவனத்தில் பணிபுரிவதாகவும் அந்த காப்புறுதி நிறுவனத்தில் 70,000 வெள்ளிக்கான காப்புறுதியை அந்த நிர்வாகி வாங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அத்தகைய காப்புறுதியை தாம் வாங்கவில்லை என அந்த நிர்வாகி மறுத்துள்ளார். இது குறித்து போலீசில் புகார் செய்யும்படி கூறிய அந்த பெண், அந்த அழைப்பை புடு போலீஸ் நிலையத்துடன் இணைத்துள்ளார். அங்கு போலீஸ் அதிகாரிகள் எனக் கூறிக் கொண்ட மூன்று நபர்கள் பாதிக்கப்பட்ட அந்த நிர்வாகியுடன் பேசியுள்ளனர் என சூப்ரண்டெண்டன் எலியாஸ் சொன்னார்.
சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பில் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பதாகவும் அம்மூவரும் அந்த நிர்வாகியை மிரட்டியுள்ளனர்.
பின்னர் துணை பப்ளிக் புரோசிகியூட்டர் என அடையாளம் கூறப்பட்ட நபருக்கு இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்நபரோ கைது ஆணையை தாம் ஒத்தி வைக்க உதவுவதாகவும் அதற்கு கைமாறாக அனைத்து தகவல்களையும் தங்களுக்கு தர வேண்டும் என்று அந்த நிர்வாகியை பணித்துள்ளார்.
அந்த நிர்வாகியும் தனது வங்கி கணக்கின் விபரங்கள் மற்றும் தாபோங் ஹாஜியில் வரவு வைக்கப்பட்டுள்ள பத்து லட்சம் வெள்ளி உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அவர் அக்கும்பலிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி தனது வங்கி கணக்குகளை சோதனையிட்ட போது 12 லட்சம் வெள்ளி வேறு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டதை அறிந்து அந்த நிர்வாகி அதிர்ச்சியடைந்துள்ளார் என அவர் சொன்னார்.
இதனைத் தொடர்ந்து அந்த நிர்வாகி லுனாஸ் போலீஸ் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பில் புகார் அளித்த தாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


