ஷா ஆலம், ஏப் 19- ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளைப் பெற பாசீர் பெனாம்பாங்கில் உள்ள பெஸ்ட் ப்ரெஷ் மார்ட் பேரங்காடிக்கு நாளை வரும்படி பெர்மாத்தாங் தொகுதியிலுள்ள 517 மூத்த குடிமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பிறந்தவர்களுக்கு இந்த பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் அனைவரும் நாளை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 வரை அந்த 100 வெள்ளிக்கான பற்றுச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரோஸானா ஜைனால் அபிடின் கூறினார்.
பற்றுச் சீட்டுகள் காணாமல் போவதை தடுக்க அதனை பெற்றவுடன் தங்களுக்கு வேண்டிய பொருள்கள் அந்த பேரங்காடியில் வாங்கிக் கொள்ளும்படி அவர் ஆலோசனை கூறினார்.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பிறந்தவர்களுக்கு பிறந்த நாள் பரிசாகவும் அவர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் விதமாகவும் இந்த பற்றுச் சீட்டுகள் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த பற்றுச் சீட்டு விநியோகத்தை உள்ளடக்கிய மூத்த குடிமக்கள் பரிவு உதவித் திட்டம் பத்தாண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு அவர்களின் பிறந்த நாளின் போது 100 வெள்ளிக்கான பற்றுச் சீட்டுகள் வழங்கப்படுகிறது. அதோடு மரண சகாய நிதியையும் இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது.


