ஷா ஆலம், ஏப் 19- விரைவில் கொண்டாடப்படவிருக்கும் நோன்புப் பெருநாளின் போது போதுமான அளவு அத்தியாவசிய மற்றும் மூலப் பொருள் கையிருப்பு உள்ளதாக சிலாங்கூர் அரசு கூறியது.
ஆகவே, தேவைக்கு அதிகமான பொருள்களை வாங்கிக் குவிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு தாங்கள் ஆலோசனை கூற விரும்புவதாக பயனீட்டாளர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி கூறினார்.
மாநிலத்தில் போதுமான அளவு உணவுப் பொருள் கையிருப்பு உள்ளதோடு பற்றாக்குறை தொடர்பில் வணிகர்கள் அல்லது பயனீட்டாளர்களிடமிருந்து எந்த புகாரும் இதுவரை பெறப்படவில்லை என்று அவர் சொன்னார்.
நேற்று இங்குள்ள ஷா ஆலம் அரங்கில் உள்ள ரமலான் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் பந்தாவ் நடவடிக்கையைப் பார்வையிட்டப் பின்னர் இவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த சோதனை நடவடிக்கையில் உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் சிலாங்கூர் மாநில இயக்குநர் முகமது ஜிக்ரில் அஸானும் பங்கேற்றார்.
வரும் மே மாதம் கொண்டாடப்படவிருக்கும் நோன்புப் பெருநாளின் போது கோதுமை, அரிசி, சமையல் எண்ணெய், முட்டை ஆகிய உணவுப் பொருள்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு முன்னதாக கூறியிருந்தது.


