ஷா ஆலம், ஏப் 19- இம்மாதம் 3 ஆம் தேதி தொடங்கி மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட “ஓப்ஸ் பந்தாவ்“ நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்களுக்காக 51 வணிகர்களுக்கு குற்றப் பதிவுகள் வெளியிடப்பட்டன.
அவற்றில் 29 குற்றங்கள் விலை மற்றும் நிறுவைக் கருவிகள் தொடர்புடையவையாகும் என்று உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் சிலாங்கூர் மாநிலப் பிரிவு இயக்குநர் முகமது ஜிக்ரில் அஸான் கூறினார்.
சம்பந்தப்பட்ட வணிகர்களிடமிருந்து 811,717.70 மதிப்புள்ள வர்த்தக பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு 18,100 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
இந்த ஓப்ஸ் பந்தாவ் நடவடிக்கையின் போது நாங்கள் 5,705 வர்த்தக மையங்கள் மீது சோதனை மேற்கொண்டோம். நிர்ணயிக்கப்பட்ட விதிகளை மீறியதற்காக அவற்றில் ஏழு மையங்களுக்கு அபராதம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்றார் அவர்.
ரமலான் சந்தைகள், பெரிய மார்க்கெட்டுகள், காலைச் சந்தைகள், பேரங்காடிகள், மளிகைக் கடைகள் மற்றும் இணைய வாணிகத்தை இலக்காக கொண்டு இந்த ஓப்ஸ் பந்தாவ் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இச்சோதனையில் பொருள் விலை, பொருள் விநியோகம், மலிவு விற்பனை இயக்கம், நிறுவைக் கருவிகள், போலியான மற்றும் கள்ளப் பதிப்பு பொருள்கள் விற்பனை மற்றும் ஹாலால் பொருள்கள் ஆகிய அம்சங்கள் மீது கவனம் செலுத்தப்பட்டது என்று அவர் மேலும் சொன்னார்.


