கோலாலம்பூர், ஏப் 18- அரசு ஊழியர்களுக்கான குறைந்த பட்ச மாதச்சம்பளத்தை 1,800 வெள்ளியாக உயர்த்தும்படி அரசு ஊழியர்கள் தொழிற்சங்கமான கியூபெக்ஸ் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினத்தை சமாளிக்கும் வகையில் நடப்பு சம்பள விகிதம் இல்லாததால் இந்த கோரிக்கையை தாங்கள் முன்வைப்பதாக கியூபெக்ஸ் தலைவர் டத்தோ அட்னான் மாட் கூறினார்.
நடப்பு சம்பள விகிதம் எங்களுக்கு அவ்வளவு மனநிறைவளிப்பதாக இல்லை. தொடர்ந்து அதிகரித்து வரும் பொருள் விலையை சமாளிக்கும் வகையிலும் அந்த வருமானம் இல்லை. ஆகவே, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் சிறிதும் நியாயமானதாக இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையில் அரசு ஊழியர்களின் குறைந்த பட்ச சம்பளத்தை 1,800 வெள்ளியாக உயர்த்தும்படி நாங்கள் அரசாங்கத்தை பரிந்துரைக்கிறோம். ஜி.எல்.சி. எனப்படும் அரசு சார்பு நிறுவனங்களில் சம்பள விகிதத்தை அரசாங்கம் 1,500 வெள்ளியாக நிர்ணயித்த போதிலும் நாங்கள் 1,800 வெள்ளி சம்பளத்தை கோருகிறோம் என்றார் அவர்.
நேற்று இங்கு நடைபெற்ற கியூபெக்சின் உச்ச மன்றக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் குறைந்த பட்ச சம்பள விகிதம் வரும் மே 1 ஆம் தேதி தொடங்கி 1,500 வெள்ளியாக நிர்ணயிக்கப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கடந்த மாதம் 19 ஆம் தேதி அறிவித்திருந்தார்.
இந்த புதிய சம்பள விகிதத்தை அமல்படுத்தும் பட்சத்தில் புதிய அரசு ஊழியர்களுக்கும் பழைய ஊழியர்களுக்கும் இடையிலான சம்பள இடைவெளி குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இரட்டை சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று டத்தோ அட்னான் கோரிக்கை விடுத்தார்.


