ECONOMY

ஐ.சீட் மூலம் மூன்று தொழில்முனைவோர் வெ. 18,000 மதிப்புள்ள வர்த்தக உபகரணங்களைப் பெற்றனர்

12 ஏப்ரல் 2022, 12:42 PM
ஐ.சீட் மூலம் மூன்று தொழில்முனைவோர் வெ. 18,000 மதிப்புள்ள வர்த்தக உபகரணங்களைப் பெற்றனர்

ஷா ஆலம், ஏப் 12- ஐ.சீட் எனப்படும் சிலாங்கூர் இந்திய சமூக மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு இலாகா மூலம் கோம்பாக்கை சேர்ந்த மூன்று தொழில் முனைவோர் சுமார் 18,000 வெள்ளி மதிப்புள்ள வர்த்தக உபகரணங்களைப் பெற்றனர்.

தற்காலிக டெண்ட் கூடாரங்களைப் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள கே. அசோகனுக்கு 6,785 வெள்ளி மதிப்புள்ள ஏழு செட் கூடாரங்கள் இம்மாதம் முதல் தேதி வழங்கப்பட்டதாக கோம்பாக் மாவட்டத்திற்கான ஐ-சீட் நடவடிக்கை அதிகாரி டினேஷ் செல்வராஜூ கூறினார்.

இந்த ஐ-சீட் உபகரணங்களை வழங்கும் நிகழ்வுக்கு தலைமையேற்ற உலு கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் ஷஹாரி சுங்கிப் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று தனது பேஸ்புக் பதிவில் டினேஷ் தெரிவித்தார்.

புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்கும் சேவையை வழங்கி வரும் பெனடிக் லோரன்ஸ் ஜோசப்புக்கு 6,454 வெள்ளி மதிப்பில் ஐந்து விதமான புகைப்பட சாதனங்கள் இம்மாதம் 4 ஆம் தேதி வழங்கப்பட்டன என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதனிடையே, குத்தகையாளரான டபள்யு. அல்வின் என்பவருக்கு 4,750 வெள்ளி மதிப்புள்ள ஜெனரேட்டர் மற்றும் வெல்டிங் எனப்படும் பற்றவைப்பு இயந்திரங்கள் இம்மாதம் 5 ஆம் தேதி வழங்கப்பட்டன என்று அவர் சொன்னார்.

பெனடிக் மற்றும் அல்வின் ஆகியோர் ரவாங் தொகுதி இந்திய சமூகத் தலைவர் தேவாவிடமிருந்து இந்த உபகரணங்களைப் பெற்றுக் கொண்டனர்.

சமூக பொருளாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் முயற்சியில் இந்த ஐ-சீட் திட்டம் கடந்த ஈராண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

தகுதி உள்ள இந்திய தொழில் முனைவோருக்கு வர்த்தக உபகரணங்களை வழங்குவதை நோக்கமாக கொண்ட இத்திட்டத்திற்கு மாநில அரசு வருடாந்திர மானியமாக 10 லட்சம் வெள்ளியை வழங்குகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.