ECONOMY

எண்டமிக் கட்டத்திற்கு நாடு மாற்றம்- பொதுமக்கள் விழிப்புடன் இருக்க சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை

11 ஏப்ரல் 2022, 9:24 AM
எண்டமிக் கட்டத்திற்கு நாடு மாற்றம்- பொதுமக்கள் விழிப்புடன் இருக்க சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை

கோலாலம்பூர், ஏப் 11- இவ்வாண்டு ஏப்ரல் முதல் தேதி தொடங்கி நாடு எண்டமிக் கட்டத்திற்கு மாறும் நிலையில் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் உத்வேகம் பெற்றுள்ளதோடு மக்கள் நடமாட்டமும் எல்லா இடங்களிலும் அதிகரித்துக் காணப்படுகிறது.

இந்த மாற்றம் காரணமாக கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு முன்பு விதிக்கப்பட்ட கடுமையான எஸ்.ஒ.பி. விதிமுறைகள் இப்போது தளர்த்தப்பட்டு வழிபாட்டுத் தலங்களில் மக்கள் வழக்கம் போல் அதிக எண்ணிக்கையில் கூடவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

எனினும், பொது மக்கள் நோய்த் தொற்று விஷயத்தில் அலட்சியமாக இருக்கக்கூடாது என்பதோடு சமூகத்தில் இன்னும் ஊடுருவியிருக்கும் அந்த ஆட்கொல்லி வைரசை குறைத்து மதிப்பிடவும் கூடாது என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மலேசியர்கள் எப்போதும் ரமலான் சந்தைகள் போன்ற மக்கள் நடமாட்டம் மிகுந்த மற்றும் முழுமையாக மூடப்பட்ட பகுதிகளில் முககவசங்களை அணிந்திருக்க வேண்டும் என்று மலாயா பல்கலைக்கழகத்தின் மருந்தியல் மற்றும் தொற்று நோயில் பேராசிரியர் டத்தோ டாக்டர் அடீபா கமாருள்ஸமான் பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு காரணமான சார்ஸ்-கோவி-2 வகை வைரஸ் பொதுவாக காற்றில் பரவும் என்பதால் நாம் இருக்கும் பகுதி காற்றோட்டமிக்கதாக உள்ளதை உறுதி செய்வது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

பொது மக்கள் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசி உள்பட முழுமையான தடுப்பூசியை பெற்றிருப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பொது மக்கள் அனைவரும் மூன்று முக்கிய எஸ்.ஒ.பி. விதிமுறைகளான முககவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது மற்றும் கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பது ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும் என்று சைபர் ஜெயா காசே மருத்துவமனையின் வேலையிட சுகாதாரம், அவசரப் பிரிவு மற்றும் பொது சுகாதார நிபுணர்  டாக்டர் ஹனாப்பியா பாஷ்ருன் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.