ANTARABANGSA

டி.பி.கே.எல். அமலாக்க அதிகாரி தாக்கப்பட்ட விவகாரம்- அந்நியத் தம்பதியர் கைது

10 ஏப்ரல் 2022, 5:05 AM

கோலாலம்பூர், ஏப் 10- செலாயாங்கில் வங்கி ஒன்றின் எதிரே பணியில் ஈடுபட்டிருந்த கோலாலம்பூர் மாநகர் மன்ற அமலாக்க அதிகாரியைத் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அந்நிய நாட்டுத் தம்பதியை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்.

இரு வெளிநாட்டினர் தங்களுடன் ஒத்துழைக்காததோடு சினமூட்டும் செயலிலும் ஈடுபடுவதாக சம்பந்தப்பட்ட அமலாக்க அதிகாரியிடமிருந்து தாங்கள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.41 மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாக செந்துல் மாவட்ட துணை போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஹூசேய்ன் ஹருண் கூறினார்.

அந்த வங்கியின் நடைபாதையில் அந்த அந்நிய நாட்டினர் வணிகம் செய்து கொண்டிருந்ததை மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகள் கண்டனர். அவர்களின் வர்த்தகப் பொருள்களை பறிமுதல் செய்ய அந்த அமலாக்க அதிகாரிகள் முற்பட்ட போது அவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தின் போது அமலாக்க அதிகாரி ஒருவரின் கைப்பேசி கீழே விழுந்து சேதமடைந்த து என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

அந்த தம்பதியர் தகாத வார்த்தைகளில் அமலாக்க அதிகாரிகளைத் திட்டியதோடு அதிகாரி ஒருவரின் முகத்திலும் காறி உமிழ்ந்தனர். மேலும் தாங்கள் கைது செய்யப்படுவதிலிருந்து தப்புவதற்காக அவர்கள் தங்களின் உடைகளைத் தாங்களே கிழித்துக் கொண்டு அமலாக்க அதிகாரி கிழித்ததாக பழி சுமத்தினார் என்றார் அவர்.

சம்பந்தப்பட்ட தம்பதியை சம்பவ இடத்திலேயே கைது செய்த போலீசார் மேல் விசாரணைக்காக 9 ஆம் தேதி தொடங்கி 22 தேதி வரை மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் தடுத்து வைத்துள்ளனர் என்றார்.

இச்சம்பவம் தொடர்பில் 353 வது தண்டனைச் சட்டம் மற்றும் செல்லத்தக்க பயணப் பத்திரம் இல்லாததற்காக குடிநுழைவுத் துறை சட்டத்தின் 6 ஆவது பிரிவின் கீழ்  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் குறிப்பிட்டார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.