பெட்டாலிங் ஜெயா, ஏப் 10- நோன்புப் பெருநாளை முன்னிட்டு புக்கிட் காசிங் தொகுதி ஏற்பாட்டில் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பைச் சேர்ந்த 450 பேருக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.
இதற்கு முன்னர் இச்சலுகையைப் பெறாத குறைந்த வருமானம் பெறும் தரப்பினரை இலக்காக கொண்டு இந்த உதவி வழங்கப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராஜீவ் கூறினார்.
இந்த பற்றுச் சீட்டுகளை வழங்கும் பணி முற்றுப் பெற்று விட்டன. சம்பந்தப்பட்டவர்கள் 100 வெள்ளி மதிப்பிலான அந்த பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி கிளானா ஜெயா ஜயண்ட் பேரங்காடியில் நோன்புப் பெருநாளுக்குத் தேவையான பொருள்களை வாங்கி க் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.
பொருள்களின் விலை உயர்வு கண்டு வரும் இவ்வேளையில் மாநில அரசின் இந்த உதவி வசதி குறைந்தவர்களின் பொருளாதார சுமையைக் குறைப்பதில் ஓரளவு உதவும் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
மாநிலத்தில் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பைச் சேர்ந்த 33,400 பேருக்கு நோன்புப் பெருநாள் பற்றுச் சீட்டுகளை வழங்க மாநில அரசு 33 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.


