ANTARABANGSA

எல்லைத் திறப்புக்குப் பின் நாட்டிற்குள் நுழைந்த,வெளியேறிய பயணிகள் எண்ணிக்கை 250,000 ஆகப் பதிவு

7 ஏப்ரல் 2022, 7:18 AM
எல்லைத் திறப்புக்குப் பின் நாட்டிற்குள் நுழைந்த,வெளியேறிய பயணிகள் எண்ணிக்கை 250,000 ஆகப் பதிவு

புத்ரா ஜெயா, ஏப் 7- இம்மாதம் 1 தேதி நாட்டின் எல்லைகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த நான்கு நாட்களில் முதன்மை நுழைவாயில்கள் வாயிலாக நாட்டிற்குள் நுழைந்த மற்றும் வெளியேறிய பயணிகளின் எண்ணிக்கை 252,730 ஆக பதிவாகியுள்ளது.

அவர்களில் 126,392 மலேசியர்கள் நாட்டிற்குள் நுழைந்த வேளையில் 28,301 பேர் நாட்டிலிருந்து வெளியேறியதாக குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ கைருள் ஜைமி டாவுட் கூறினார்.

இக்காலக்கட்டத்தில் 55,121 அந்நிய நாட்டினர் நாட்டிற்கு வந்துள்ளனர். 42,916 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்று இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

ஜோகூர், சுல்தான் இஸ்கந்தார் கட்டிடம் வாயிலாக மிக அதிகமாக அதாவது 160,818 அந்நிய நாட்டினர் நாட்டிற்குள் நுழைந்த வேளையில் அதற்கு அடுத்த நிலையில் கே.எல்.ஐ.ஏ. வழியாக 38,407 பேரும் ஜோகூர் காம்ப்ளெக்ஸ் சுல்தான் அபு பாக்கர் வழியாக 53,113 பேரும் கே.எல்.ஐ.ஏ.2 மூலம் 11,712 பேரும் புக்கிட் காயு ஹீத்தாம் வாயிலாக 6,980 பேரும் நாட்டிற்கு வந்தனர் என்றார் அவர்.

மலேசியாவுக்கு வந்த வெளிநாட்டினர் பட்டியலில் 65,165 பேருடன் சிங்கப்பூரியர்கள் முதலிடம் வகிக்கும் வேளையில் அதற்கு அடுத்த நிலையில் தாய்லாந்து, இந்தோனேசியா, இந்தியா, இங்கிலாந்து, ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த நான்கு நாட்களில் தமது துறை 12,923 அனைத்துலக கடப்பிதழ்களை வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.