கோலாலம்பூர், ஏப் 6- எண்டமிக் எனப்படும் குறுந்தொற்று காலத்திலும் பொது மக்கள் கோவிட்-19 நோய்த் தொற்று பரவலுக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதோடு கிருமி பரவலைத் தடுப்பதற்கு ஏதுவாக தொடர்ந்து முகக் கவசங்களை அணிந்து வர வேண்டும் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
மூடப்பட்ட, காற்றோட்டம் இல்லாத மற்றும் அதிகம் மக்கள் கூட்டம் உள்ள இடங்கள் மற்றும் மக்கள் நெருக்கடிமிக்க பகுதிகளில் வைரஸ் பரவலைத் தடுப்பதில் முகக் கவசங்கள் ஆக்ககரமான பலனைத் தருவதாக அவர் சொன்னார்.
கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்ந்து நம்மிடையே இருப்பதோடு குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட முதியோர் மற்றும் சிறார்கள் மத்தியில் மரணங்களையும் விளைவித்து வருகிறது என அவர் குறிப்பிட்டார்.
பலர் தங்களுக்கு கோவிட்-19 நோய்த் தொற்று இருப்பது தெரியாமலே பொது இடங்களுக்கு வருவதற்கான சாத்தியம் உள்ளதால் முககவசம் அணிவது நம்மை அவர்களிடமிருந்து காத்துக் கொள்வதற்கான சிறந்த கவசமாக விளங்கும் என்றார் அவர்.
சார்ஸ்-கோவி2 கிருமிகள் சுவாசத் துளிகள் வழியாக எளிதில் பரவுவதால் முககவசத்தை மூக்கிற்கு கீழ் அல்லது மூக்கு நுனியில் அல்லாமல் மூக்கு மற்றும் வாய் முழுமையாக மூடும் வகையில் அணிவதே முறையாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


