ஷா ஆலம், ஏப் 1- லைசென்ஸ் நிபந்தனையை மீறிய குற்றத்திற்காக பூச்சோங், தாமான் பூச்சோங் உத்தாமா தொழில்பேட்டையிலுள்ள உணவகம் ஒன்று உடனடியாக மூட உத்தரவிடப்பட்டது.
அந்த உணவகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அதன் தூய்மையின் தரம் 65 புள்ளிகளுக்கும் கீழ் அதாவது ‘டி‘ கிரேட்டாக இருந்ததாக சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் வியூக மேலாண்மைத் துறையின் துணை இயக்குநர் அஸ்பரிஷால் அப்துல் ரஷிட் கூறினார்.
அப்பகுதியிலுள்ள 68 வர்த்தக மையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுக்காக 11 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
வர்த்தக இடங்கள் முறையாகப் பராமரிக்கப்படாதது, பணியாளர்கள் டைபாய்டு ஊசியை செலுத்தாதது, மூடும் வசதி கொண்ட குப்பைத் தொட்டிகளைக் கொண்டிராதது போன்றவை அந்த வர்த்தக மையங்கள் புரிந்த குற்றங்களாகும் என்றார் அவர்.
மாநகர் மன்றம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்றும்படி வர்த்தக மைய உரிமையாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
நேற்று காலை 10.30 மணியளவில் தொடங்கிய இச்சோதனை நடவடிக்கையில் மாநகர் மன்றத்தின் சுகாதாரத் துறை, அமலாக்கத் துறை, லைசென்ஸ் துறை, சுற்றுச்சூழல் துறை மற்றும் வர்த்தக, வியூக மேலாண்மைத் துறையைச் சேர்ந்த 56 அதிகாரிகள் பங்கு கொண்டனர்.


