கோலாலம்பூர், ஏப் 1- மைசெஜாத்ரா செயலி வழி பெறப்படும் ஒவ்வொரு தரவு மற்றும் தகவலுக்கு மலேசிய அரசாங்கமே ஏகபோக உரிமையைக் கொண்டுள்ளது என்று மேலவையில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2020 ஏப்ரல் முதல் தேதி மலேசிய அரசாங்கம் சார்பில் தேசிய பாதுகாப்பு மன்றமும் கே.பி.ஐ.சோப்ட் நிறுவனமும் கையெழுத்திட்ட என்.டி.ஏ. எனப்படும் தகவலை பகிரங்கப்படுத்தாத ஒப்பந்தத்தின் முதல் ஷரத்தாக இது இடம் பெற்றுள்ளது என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
ஆகவே, மைசெஜாத்ரா தரவு மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் அனைத்து தகவல்களும் பாதுகாப்பானவை என்பதோடு சுகாதார அமைச்சின் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திற்கு மட்டுமே பயன்படக்கூடியது என்று அவர் உறுதியளித்தார்.
மைசெஜாத்ரா தரவுகளின் பயன்பாடும் நிர்வாகமும் 1988 ஆம் ஆண்டு தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டம், 1971 ஆம் ஆண்டு மருத்துவச் சட்டம் மற்றும் அனைத்துலக தர நிர்ணயத்திற்கு உட்பட்டுள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இந்த செயலி பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் அது பாதுகாப்பானதாகவும் எளிதில் ஊடுருவ முடியாத வகையிலும் இருப்பதை மம்பு எனப்படும் மலேசிய நவீனமய நிர்வாக மற்றும் மேலாண்மை திட்டமிடல் பிரிவும் தேசிய இணைய பாதுகாப்பு நிறுவனமும் உறுதி செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யாராவது சங்கேத குறியீட்டைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்து தரவுகளை எடுத்தால் அவ்வாறு நுழைந்தவர் யார் என்பதை நாம் கண்டுபிடித்து விடுவோம் என்றார் அவர்.


