சிப்பாங், மார்ச் 31- நாட்டின் எல்லைகள் நாளை திறக்கப்படுவதையொட்டி அதிகளவிலான விமானங்கள் மற்றும் பயணிகளை எதிர்கொள்ள நாட்டின் முதன்மை நுழைவாயிலான கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் முழு தயார் நிலையில் உள்ளது.
கே.எல்.ஐ.ஏ மற்றும் கே.எல்.ஐ.ஏ.2 விமான நிலையங்களில் அமலாக்கம், எஸ்.ஓ.பி. கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னேற்பாடுகளை செய்வதில் விமான நிலையப் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருவது பெர்னாமா செய்தி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது.
விமான நிலையத்திலுள்ள உணவகங்கள், உடனடி உணவு விற்பனை மையங்கள், பல்பொருள் விற்பனை நிலையங்கள், நினைவுச் சின்ன விற்பனை கடைகள், சாக்லேட் விற்பனை மையங்கள் முழு அளவில் செயல்படுவதற்குரிய தயார் நிலையில் உள்ளதையும் காண முடிந்தது.
எஸ்.ஒ.பி. விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் மற்றும் சட்டவிரோத வாடகைக் காரோட்டிகள் பற்றிய எச்சரிக்கை குறித்து ஒலிபெருக்கியில் அடிக்கடி நினைவூட்டப்பட்டது.
கே.எல்.ஐ.ஏ.வில் தரையிறங்கும் மற்றும் புறப்படும் விமானங்களின் எண்ணிக்கை நாளை வெளியிடப்படும் என்று மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் ஹோல்டிங்ஸ் தொடர்பு மற்றும் வர்த்தக பிரிவு தலைமை நிர்வாகி நிக் அனிஸ் நிக் ஜக்காரியா கூறினார்.
தற்போது தாங்கள் விமான நிறுவனங்களிடமிருந்து விபரங்களைப் பெற்று அவற்றை முறைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, நாளை கே.எல்.ஐ.ஏ.2 முனையத்திலிருந்து கம்போடியா, வியட்னாம், இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து,வங்காளதேசம், பிலிப்பைன்ஸ், இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளுக்கு விமானச் சேவை மேற்கொள்ளப்படும் என்று ஏர் ஆசியா நிறுவனம் தெரிவித்தது.


