கோலாலம்பூர், மார்ச் 31- தாமான் மெலாத்தி, கம்போங் வாரிசான், ஜாலான் கோலாம் ஆயரில் நேற்று மாலை ஏற்பட்ட மண் நகர்வுக்கு கிள்ளான் கேட்ஸ் நீர்த்தேக்கம் நோக்கிச் செல்லும் சாலையில் மேற்கொள்ளப்பட்ட பழுதுபார்ப்பு பணிகளே காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நால்வர் தங்கியிருந்த வீடொன்று இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபாரூக் ஏசாக் கூறினார்.
அந்த மண் நகர்வு காரணமாக அந்த வீட்டின் பின்புறத்தில் மண் சூழ்ந்ததே தவிர வேறு எந்த பாதிப்போ உயிர் சேதமோ ஏற்படவில்லை என்று அவர் விளக்கினார்.
அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் அங்கு மேற்கொண்ட ஆய்வில் நிலச் சரிவு எதுவும் நிகழவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது என்று பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவித்தார்.
மலைப்பாங்கான இடங்களில் வீடுகளை கட்டியுள்ளவர்கள் தற்போதைய நிச்சயமற்ற வானிலையைக் கருத்தில் கொண்டு எந்நேரமும் விழிப்புடன் இருக்கும்படி அவர் வலியுறுத்தினார்.
இத்தகைய பகுதிகளில் அடைமழை பெய்யும் சமயங்களில் நிலச்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


