ஷா ஆலம், மார்ச் 31- தலைநகர், ஜாலான் கூச்சிங் வார்த்தா லாமாவில் ஏற்பட்ட வால்வு நீர் கசிவை சரிசெய்யும் பணி இன்று விடியற்காலை 2.00 மணியளவில் பூர்த்தியடைந்ததாக பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.
இப்பணி நேற்றிரவு 9.00 மணியளவில் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக அப்பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் வர்த்தக, தொடர்பு பிரிவுத் தலைவர் எலினா பஸேரி கூறினார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நீர் விநியோகம் செய்யும் பணி கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.
இடம் மற்றும் பயனீட்டாளர்கள் இருப்பிடத்தின் தொலைவு ஆகியவற்றைப் பொறுத்து நீர் விநியோக நேரம் மாறுபடும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வால்வு நீர் கசிவு காரணமாக கோலாலம்பூர் மற்றும் கோம்பாக் வட்டாரத்தின் 144 பகுதிகளில் நேற்று முன்தினம் நீர் விநியோகத் தடை ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு லோரிகள் மூலம் நீரை விநியோகிக்கும் பணி மேற்கொள்ளப்படுவதாக கூறிய எலினா, இந்த நீர் விநியோகப் பணியில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.
லோரிகள் மூலம் வழங்கப்படும் நீரை பெறும் போது கூடல் இடைவெளியைக் கடைபிடிக்கும் அதேவேளையில் முகக் கவசம் அணிந்திருக்கும்படியும் வாடிக்கையாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.


