ஷா ஆலம், மார்ச் 31- கிள்ளான் மாவட்ட மன்றம் நேற்று மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில் பண்டமாரான் தொழில்பேட்டை பகுதியில் அரசாங்க நிலத்தில் கட்டப்பட்டிருந்த சட்டவிரோத கட்டுமானங்கள் உடைக்கப்பட்டன.
தடுப்பு வேலிகள், லோரி நிறுத்துமிடம், பட்டறை, ஆட்டுப் பண்ணை மற்றும் கோயில் நிர்வாகத்தினரால் கட்டப்பட்ட இரண்டு கழிப்பறைகள் ஆகியவை இந்நடவடிக்கையின் போது உடைக்கப்பட்டதாக கிள்ளான் மாவட்ட அதிகாரி முகமது பைசால் அப்துல் ராஜி கூறினார்.
பட்டறை மற்றும் கால்நடை தீவன சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை அதன் உரிமையாளர்களை சொந்தமாக அப்புறப்படுத்தி விட்டதாக அவர் சொன்னார்.
அப்பகுதியில் உள்ள ஆற்று ரிசர்வ் நிலம் மற்றும் காலி இடம் ஆகியவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தொடர்பில் வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறையிடமிருந்து (ஜே.பி.எஸ்.) புகார் கிடைக்கப்பெற்றதன் பேரில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ஆற்றில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் அந்த கட்டுமானங்கள் இடையூறாக இருந்தன. ஆற்றில் பராமரிப்பு பணிகளை ஜே.பி.எஸ். சீராக மேற்கொள்வதற்கு ஏதுவாக அந்த ரிசர்வ் நிலத்தில் இருந்த கட்டுமானங்கள் அகற்றப்பட்டன என்றார் அவர்.
தேசிய நிலச்சட்டத்தின் 425 வது பிரிவின் கீழ் நில ஆக்கிரமிப்பு தொடர்பான நோட்டீஸ் அந்த கட்டுமான உரிமையாளர்களுக்கு கடந்தாண்டு ஜூலை 1 ஆம் தேதி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், அங்குள்ள ஆலயத்தின் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டதன் பேரில் அக்கட்டுமானத்தை அகற்றுவதற்கு மேலும் 14 நாட்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
அங்குள்ள ஆட்டுப் பண்ணை உரிமையாளர் சம்பந்தப்பட்ட அந்த பண்ணையை கேரித் தீவுக்கு மாற்றுவதற்கு ஏதுவாக அவருக்கும் 14 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இரு வார காலத்தில் கட்டுமானங்களை அகற்றுவது தொடர்பான உத்தரவாத கடிதத்தில் அவ்விரு தரப்பினரும் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


