புத்ரா ஜெயா, மார்ச் 31- பொது இடங்களில் நுழைவதற்கு முன்னர் மைசெஜாத்ரா செயலியில் பதிவிடுவதை கட்டாயமாக்கும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை (எஸ்.ஒ.பி.) அகற்றப்படுவதற்கான சாத்தியத்தை சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கோடி காட்டியுள்ளார்.
வரும் ஏப்ரல் மாதம் முதல் தேதி நாட்டின் எல்லைகள் திறக்கப்பட்டப் பின்னர் பதிவாகக்கூடிய கோவிட்-19 நோய்த் தொற்று நிலவரம் மற்றும் பொது மக்கள் மற்றும் சுற்றுப்பயணிகளின் நடமாட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் மைசெஜாத்ரா செயலி பதிவு விதிமுறையை அகற்றுவது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.
ஏப்ரல் மாதம் முதல் தேதிக்குப் பிந்தைய நிலவரங்களை நாம் கவனிக்க வேண்டியுள்ளதால் இந்த நடைமுறையின் அமலாக்கம் மீது முடிவெடுக்க இன்னும் ஒரு மாத காலம் பிடிக்கும் என அவர் தெரிவித்தார்.
அக்காலக் கட்டத்தில் நோய்த் தொற்று நிலவரத்தில் பெரிதாக மாற்றம் இல்லாத பட்சத்தில் பொது இடங்களில் நுழைவதற்கு முன்னர் மைசெஜாத்ரா செயலியில் பதிவிடும் முறையை நாம் அகற்றி விடுவோம் என்றார் அவர்.
நேற்று இங்கு தேசிய நிலையிலான ஒருங்கிணைந்த உடல் பருமன் மேலாண்மை நிகழ்வு மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான உலக உடல் நடவடிக்கை தின நிகழ்வை முடித்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பொது இடங்களில் புத்தகங்களில் விபரங்களை பதிவிடுவது மற்றும் உடல் உஷ்ணத்தை சோதிப்பது போன்ற எஸ்.ஒ.பி. நிபந்தனைகளை அரசாங்கம் கடந்த மாதம் 11 ஆம் தேதி அகற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.


