கோலாலம்பூர், மார்ச் 31- பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியை பெறாத காரணத்திற்காக வரும் ஏப்ரல் முதல் தேதி தொடங்கி தடுப்பூசியை முழுமையாகப் பெற்றதற்கான தகுதியை இழந்த நபர்கள் தங்கள் வழக்கமான பணிகளை எந்த இடையூறுமின்றி மேற்கொள்ளலாம்.
உணவகங்களில் அமர்ந்து உணவருந்துவது, பேரங்காடிகளுக்கு சென்று பொருள்கள் வாங்குவது, வேலைக்குச் செல்வது மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வது போன்ற பணிகளை அவர்கள் மேற்கொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்ற வாடிக்கையாளர்கள் அல்லது வருகையாளர்கள் வர்த்தக மையத்திற்கு அல்லது வழிபாடுத் தலங்களுக்கு செல்வதை அதன் பொறுப்பாளர்கள் அனுமதிக்க வேண்டும் என்று அவர் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டார்.
சினோவேக் மற்றும் சினோபார்ம் தடுப்பூசியை முதன்மை தடுப்பூசியாகப் பெற்ற 18 வயதுக்கும் மேற்பட்டோர் மற்றும் அனைத்து விதமான தடுப்பூசிகளையும் முதன்மை தடுப்பூசிகளாகப் பெற்ற 60 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஊக்கத் தடுப்பூசியைப் பெறாத பட்சத்தில் வரும் ஏப்ரல் முதல் தேதிக்குப் பிறகு தடுப்பூசியை முழுமையாகப் பெற்றதற்கான தகுதியை இழந்து விடுவர் என தாம் ஏற்கனவே கூறியிருந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.
எனினும், ஏற்கனவே இரு டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றதை குறிக்கும் தகவல் மைசெஜாத்ரா செயலியில் தொடர்ந்து இடம் பெற்றிருக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.


