கோலாலம்பூர், மார்ச் 31- மைசெஜத்ரா செயலியின் உருவாக்கம் மற்றும் கொள்முதல் விவகாரங்கள் மீதான விசாரணையை பொது கணக்கு குழு (பி.ஏ.சி.) வரும் பிப்ரவரி மாதம் மத்தியில் ஆரம்பிக்கும் என்று அதன் தலைவர் வோங் கா வூ கூறினார்.
நிதி அமைச்சு, சுகாதார அமைச்சு, பிரதமர் துறை ஆகிய அமைச்சுகளை இந்த விசாரணை உள்ளடக்கியிருக்கும் எனக் கூறிய அவர், இதில் முக்கிய சாட்சிகளாக நிதியமைச்சர் டத்தோஸ்ரீ ஸப்ருள் அப்துல் அஜிஸ் மற்றும் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் ஆகியோர் அக்குழுவின் முன் ஆஜராவர் என்றார்.
மைசெஜாத்ரா செயலியின் நடத்துநராக தனியார் நிறுவனம் நேரடி பேச்சுவார்த்தையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதோடு இதில் அதிக செலவும் சம்பந்தப்பட்டுள்ளது. ஆகவே, மக்கள் மற்றும் நாட்டின் நலனைக் காப்பதை நோக்கமாகக் கொண்டு நடுநிலையாக செயல்படும் பி.ஏ.சி. குழுவின் முன் அனைத்து விஷயங்களும் வெளிப்படையாக விளக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
மக்களவையின் நிரந்தர விதி 77(1)(டி) பிரிவின் கீழ் பொருத்தமானது எனக் கருதும் விவகாரம் மீது விசாரணையை மேற்கொள்ளும் அதிகாரம் பி.ஏ.சி. குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மைசெஜாத்ரா செயலி தனது நிறுவன சமூக கடப்பாட்டின் அடிப்படையில் இலவசமாக வழங்கி வந்த சேவை கடந்த 2021 மார்ச் மாதம் 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில் ஏப்ரல் முதல் தேதி தொடங்கி அதற்கு கட்டணம் செலுத்த முடிவெடுக்கப்பட்டதாக கடந்த செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அளித்த பதிலின் மூலம் அரசாங்கம் தெரிவித்திருந்ததை வோங் சுட்டிக்காட்டினார்.


