கோலாலம்பூர், மார்ச் 30- குடும்ப வன்முறை தொடர்பான புகார்களை ஏற்க மறுக்கும் போலீஸ்காரர்கள் விஷயத்தில் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைபிடிக்கப்படாது என்பதோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரச மலேசிய போலீஸ் படை எச்சரித்துள்ளது.
குடும்ப வன்முறை தொடர்பான புகார்களை போலீஸ்காரர்கள் ஏற்க மறுப்பதாக மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சு கடந்த திங்கள் கிழமை குற்றஞ்சாட்டியதை தாங்கள் கடுமையாகக் கருதுவதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ அப்துல் ஜாலில் ஹசான் கூறினார்.
1994 ஆம் ஆண்டு குடும்ப வன்முறைச் சட்டம் 1996 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதி அமலுக்கு வந்தது முதல் குடும்ப வன்முறை தொடர்பான புகார்களைக் கையாள்வது தொடர்பில் பல உத்தரவுகள் வெளியிடப்பட்டுள்ளதோடு அனைத்து நிலைகளிலும் அவை பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
குடும்ப வன்முறை தொடர்பான புகார்களை ஏற்க மறுக்கும் போலீஸ்காரர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதும் அந்நடவடிக்கைகளில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அமைச்சு இவ்விவகாரம் தொடர்பான விபரங்களை வழங்க வேண்டும் எனத் தாங்கள் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


