கோலாலம்பூர், மார்ச் 30- நாட்டில் வீட்டுடமைச் சந்தை 2022 ஆம் ஆண்டில் மேம்பாடு காணும் என பேங்க் நெகாரா கணித்துள்ளது. 2021 மூன்றாம் காலாண்டில் விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வாக அதாவது 180,702 ஆக இருந்த போதிலும் இத்துறைக்கு இவ்வாண்டில் சிறப்பான எதிர்காலம் தென்படுவதாக அது தெரிவித்தது.
வீடுகளை வாங்குவதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் தேங்கியிருக்கும் வீடுகளை விற்பதில் பெருந்தொற்றின் விளைவாக ஏற்பட்ட இடையூறுகள் ஒரு காரணமாக விளங்குவதாக அது கூறியது.
வாங்கும் திறன் தொடர்பான விவகாரங்கள் விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கையை முன்பிருந்தே பிரதிபலித்து வந்தாலும் நோய்ப் பரவல் காரணமாக ஏற்பட்ட வருமான இழப்பு நிலைமையை மேலும் மோசமாக்கி விட்டது.
இதன் காரணமாக வீட்டு விநியோகப் பகுதியில் நீக்குப்போக்கு கடைபிடிக்கப்பட்டு குறைந்த மற்றும் நடுத்தர விலை வீடுகளை நிர்மாணிக்கும் திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.
ஐந்து லட்சம் வெள்ளிக்கும் குறைவான விலை கொண்ட வீடமைப்புத் திட்டங்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து கடந்த 2021 மூன்றாம் காலாண்டில் 88.1 விழுக்காடாக பதிவானது.
இதன் வழி விற்கப்படாத வீடுகளின் கையிருப்பை குறைப்பதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என பேங்க் நெகாரா தெரிவித்தது.


