ஷா ஆலம், மார்ச் 30- பூலாவ் இண்டா, லகுவானா சதுக்கத்தில் அமைக்கப்பட்ட தீயணைப்புச் சாவடி அப்பகுதியில் கூடுதலாக முதலீடு செய்வதற்குரிய நம்பிக்கையை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தும்.
தீ விபத்து ஏற்படும் பட்சத்தில் இப்பகுதி மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கும் சொத்துகளைப் பாதுகாப்பதற்கும் ஏதுவாக நிபுணத்துவ தீயணைப்புச் சேவையை வழங்குவதை இந்த தீயணைப்புச் சாவடி நோக்கமாகக் கொண்டுள்ளதாக சென்ட்ரல் ஸ்பெக்ட்ரம் நிறுவனத்தின் (சி.எஸ்.எஸ்.பி.) தலைமை செயல் முறை அதிகாரி முகமது ரஸிப் அப்துல் வஹாப் கூறினார்.
இதுபோன்ற தீயணைப்புச் சாவடி அமைக்கப்படுவது இதுவே முதன் முறை எனக்கூறிய அவர், போலீஸ் நிலையம், நகராண்மைக்கழக மற்றும் சுகாதார அமைச்சின் அலுவலகம், நூலகம் ஆகியவற்றை பூலாவ் இண்டாவில் அமைக்கும் நிறுவன பெருந்திட்டத்திற்கேற்ப இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த தீயணைப்புச் சாவடியில் இருந்து செயல்படுவதற்கு ஒப்புதல் வழங்கிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த தீயணைப்புச் சாவடியை மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது ஹம்டான் வாஹிட் திறந்து வைத்தார்.
பூலாவ் இண்டா தீவை மேம்படுத்தும் மற்றும் பிரபலப்படுத்தும் பொறுப்பு சிலாங்கூர் அரசின் துணை நிறுவனமான சி.எஸ்.எஸ்.பி.க்கு வழங்கப்பட்டுள்ளது.


