ஷா ஆலம், மார்ச் 25 - நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை நேற்று 24,316 ஆக உயர்வு கண்டது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 22,491 ஆகப் பதிவானதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
மொத்தம் 6,069 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் வேளையில் அவர்களில் 194 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 127 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
நாட்டில் மொத்தம் 239,934 நோயாளிகள் அல்லது 96.9 விழுக்காட்டினர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 1,329 பேர் அல்லது அல்லது 0.5 விழுக்காட்டினர் நாடு முழுவதும் உள்ள பி.கே.ஆர்.சி. மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடும் தாக்கம் கொண்ட மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட பாதிப்பை 152 பேர் அல்லது 0.63 விழுக்காட்டினர் எதிர்நோக்கியுள்ள வேளையில் எஞ்சிய 99.37 விழுக்காட்டினர் அல்லது 24,164 பேர் நோய்க்கான அறிகுறி இல்லாத ஒன்றாம் கட்ட மற்றும் லேசான அறிகுறி கொண்ட இரண்டாம் கட்டப் பாதிப்பைக் கொண்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
.கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் விவரங்கள் பின்வருமாறு:
• முதல் கட்டம்- 13,299 சம்பவங்கள் (54.69 விழுக்காடு)
• இரண்டாம் கட்டம்- 10,865 சம்பவங்கள் (44.68 விழுக்காடு)
• மூன்றாம் கட்டம்- 75 சம்பவங்கள் (0.31 விழுக்காடு)
• நான்காம் கட்டம் -32 சம்பவங்கள் (0.13 விழுக்காடு)
• ஐந்தாம் கட்டம்- 45 சம்பவங்கள் (0.19 விழுக்காடு).
கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக நேற்று மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 64 ஆகப் பதிவானது. அவர்களில் 18 பேர் மருத்துவமனை வருவதற்கு முன்னரே உயிரிழந்தவர்களாவர்.
நேற்று நாடு முழுவதும் 25,512 பேர் கோவிட்-19 நோயிலிருந்து குணமடைந்தனர். இதனுடன் சேர்ந்து இந்நோய்த் தொற்றிலிருந்து முற்றாக விடுபட்டவர்கள் எண்ணிக்கை 37 லட்சத்து 96 ஆயிரத்து 975 ஆக உயர்ந்துள்ளது.


