கோலாலம்பூர், மார்ச் 24- கட்சித் தாவலுக்கு எதிரான மசோதா ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் தெரிவித்தார்.
தேதியை நிர்ணயிப்பது தொடர்பாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புடன் தாம் விவாதித்துள்ளதாக அவர் சொன்னார்.
பிரதமருடன் விவாதிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது, கட்சித் தாவல் மசோதாவை விவாதிப்பதற்காக ஏப்ரல் 11 ஆம் தேதியன்று நாடாளுமன்றக் சிறப்புக் கூட்டத்தை நடத்த ஒப்புக்கொண்டோம் என அவர் கூறினார்.
மக்களவையில் வான் ஜூனைடி உரையாற்றிக் கொண்டிருந்த போது பாகான் தொகுதி ஹராப்பான் உறுப்பினர் லிம் குவான் எங் குறுக்கிட்டு, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் எப்போது நடைபெறும் என்று கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
ஏற்கனவே நோன்பு மாதத்தில் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றுள்ளதால் நோன்பு சமயத்தில் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு நடைபெறுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்.
“மாண்புமிகு உறுப்பினர் அவர்களே, நீங்கள் கவலைப்பட வேண்டாம். இந்த மசோதாவை நாங்கள் தாக்கல் செய்வோம் என்று பிரதமர் உறுதியளித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதி முடிவை எடுக்கட்டும் என்றார் அவர்.
உருமாற்றம் மற்றும் அரசியல் நிலைத்தன்மை தொடர்பில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியுடன் கடந்தாண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால் பிரதமரின் வேண்டுகோளின் படி இந்த சட்ட மசோதா தாக்கல் விரைவுபடுத்தப்படுகிறது.


