ஷா ஆலம், மார்ச் 11- காப்பார் மற்றும் கிள்ளான் வட்டாரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி இரு தினங்கள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சட்டவிரோதமான முறையில் இணையம் வழி சூதாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 12 மையங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது.
அண்மைய காலமாக அதிகரித்து வரும் இணையச் சூதாட்ட நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தெனாகா நேஷனல் பெர்ஹாட் நிறுவனத்துடன் இணைந்து இச்சோதனை நடத்தப்பட்டதாக வட கிள்ளான் மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி எஸ்.விஜய ராவ் கூறினார்.
இணையச் சூதாட்ட நடவடிக்கைகள் முற்றாகத் துடைத்தொழிக்கப்படுவதை உறுதி செய்யக் காவல் துறை உளவு நடவடிக்கைகளையும் அதிரடிச் சோதனைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வரும் என்றும் அவர் சொன்னார்.
இத்தகைய தரப்பினருக்குக் கடைகளை வாடகைக்கு விடவேண்டாம் என்று அதன் உரிமையாளர்களைக் கேட்டுக் கொள்கிறோம். மீறி நடந்தால் அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் 32 சட்டவிரோத இணைய சூதாட்ட மையங்கள் மீதும் கடந்தாண்டில் 26 மையங்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இம்மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு நீதிமன்றத்திலும் நிறுத்தப்பட்டன. எனினும் அவை தொடர்ந்து தன் மூப்பாக நடந்து வருகின்றன என்றார் அவர்.


