கோலாலம்பூர், மார்ச் 2: மலேசியா பூப்பந்து சங்கம் (பிஏஎம்) சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்குக் கோவிட்-19 தடுப்பூசியைக் கட்டாயமாக்குவதற்கான முன்மொழிவு ஆகியவை இன்று மக்களவையின் கவனத்தை இழுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாராளுமன்ற இணையதளத்தில் நடைமுறை விதிகளின்படி, மலேசியா பூப்பந்து சங்கம் தொடர்பான கேள்வியை வில்லியம் லியோங் ஜீ கீன் (PH-செலாயாங்) இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் வாய்வழிக் கேள்வி பதில் வழி சமர்பித்தார்.
பிஏஎம் வீரர்கள் தொழில் ரீதியாக இடம் பெயர்வதைத் தடுப்பதற்கான காரணங்களையும், சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிப்பது உள்ளிட்ட காரணங்களையும், அதை சரி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை களையும் தெரிவிக்குமாறு அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்.
18 வயது மற்றும் அதற்குக் குறைவான மாணவர்களுக்கு, குறிப்பாக ஆரம்ப மற்றும் இடைநிலை பள்ளிகளில் உள்ளவர்களுக்குத் தடுப்பூசியைக் கட்டாயமாக்க அமைச்சகம் உத்தேசித்துள்ளதா என்பதைச் சுகாதார அமைச்சரிடம் அகமது ஃபத்லி ஷாரி (பிஏஎஸ்-பாசிர் மாஸ்) கேட்டுக் கொண்டார்.


