ECONOMY

புகைப் பிடிப்பதற்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படும்- அமைச்சர் கைரி தகவல்

17 பிப்ரவரி 2022, 10:32 AM
புகைப் பிடிப்பதற்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படும்- அமைச்சர் கைரி தகவல்

புத்ரா ஜெயா, பிப் 17- கடந்த 2005 ஆம் ஆண்டிற்கு பின்னர் பிறந்த இளையோர் புகைப்பது மற்றும் புகைப்பதற்கு பயன்படும் மின் சிகிரெட் உள்ளிட்ட பொருள்களை வைத்திருப்பதற்கு தடை விதிக்கும் புதிய சட்டத்தை அரசாங்கம் வரையவுள்ளது.

சிகிரெட் மற்றும் புகையிலை சார்ந்த பொருள்கள் மீதான ஈடுபாட்டை இளம் தலைமுறையினர் மத்தியில் குறைக்கும் நோக்கில் இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

புற்று நோய் உண்டாவதற்கு இந்த புகையிலை சார்ந்த பொருள்கள் முக்கிய பங்காற்றுவதோடு  அந்த கொடிய நோயினால் 22 விழுக்காட்டினர் மரணமடைவதற்கு இவை காரணமாக விளங்குகின்றன என்று அவர் சொன்னார்.

புகைப் பிடிப்பதால் ஏற்படக்கூடிய நுரையீரல் புற்று நோயைக் குணப்படுத்துவதற்கு 13 கோடியே 27 லட்சம் வெள்ளி செலவாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில் 17 வயதை அடைந்த யாரும் நாட்டில் ஒரு சிகிரெட்டைக் கூட வாங்க முடியாது என்றார் அவர்.

இன்று சுகாதார அமைச்சு நிலையில் இயங்கலை வாயிலாக நடைபெற்ற புற்றுநோய் தின நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த 2007 முதல் 2011 வரை 103,507 பேராக இருந்த புற்று நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 2011 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் 11 விழுக்காடு அதிகரித்து 115,238 ஆக உயர்வு கண்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.

பத்து ஆண்களில் ஒருவருக்கும் ஒன்பது பெண்களில் ஒருவருக்கும் புற்று நோய் ஏற்படுவதை இந்த எண்ணிக்கை காட்டுகிறது எனக் கூறிய அவர், பெண்களைப் பொறுத்த வரை மார்பக புற்று நோய் ஏற்படுவதற்கு சாத்தியம் அதிகம் உள்ளது என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.