கோலாலம்பூர், பிப் 16 - சிறார்களுக்கான கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் (பிக்கிட்ஸ்) தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த விரும்பும் பெற்றோரை அச்சுறுத்த வேண்டாம் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் குறிப்பிட்ட சில தரப்பினரை வலியுறுத்தியுள்ளார்.
எனது மகனுக்கு ஊசியில் காற்று மட்டுமே செலுத்தப்பட்டது என குற்றஞ்சாட்டப்படுவதை நான் அறிவேன். ஆனாலும் இப்போது அதிகமான பெற்றோர்கள் தடுப்பூசி மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த விரும்பும் பெற்றோரைத் தடுக்கவேண்டாம் என்று தனது டிவிட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது மகன் ரைஃப்புக்கு தடுப்பூசி செலுத்தும் போது ஊசியை அவரது பார்வையில் இருந்து மறைத்த தாதியின் தொழில் நிபுணத்துவத் திறனையும் கைரி பாராட்டினார்.
ஊசியைக் காட்டாத தந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஊசியை செலுத்தும் போது என் மகன் அமைதியாக இருக்கவும் அது உதவியது. ஒரு சிலரின் அவதூறுகளிலிருந்து பிக்கிட்ஸ் திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் பாதுகாக்கப்படுவதற்கு நான் பிரார்த்திக்கிறேன் என்று அவர் கூறினார்.
கோலாலம்பூர் உலக வாணிக மையத்தில் உள்ள தடுப்பூசி மையத்தில் முதல் டோஸ் தடுப்பூசியைப் பெறும் தனது இளைய மகன் ரைஃப் படத்தை கைரி கடந்த ஞாயிற்றுக் கிழமை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.


