பாங்கி, பிப் 14- விளையாட்டு சார்ந்த திட்டங்களை ஏற்பாடு செய்வோருக்கு உதவ எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கழகம் ஆண்டு தோறும் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கு நிதி தேவைப்படும் ஏற்பாட்டாளர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று எம்.பி.ஐ. சமூக நிறுவன கடப்பாட்டுப் பிரிவின் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.
மாவட்ட அல்லது மாநில ரீதியிலான விளையாட்டுகளுக்கு செய்யப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். விளையாட்டுத் துறைக்கு உத்வேகம் அளிக்கும் நோக்கில் எம்.பி.ஐ. இந்த திட்டத்தை அமல்படுத்துகிறது என்று அவர் சொன்னார்.
கடந்தாண்டில் மலேசிய சுக்மா போட்டிக்காக சிலாங்கூர் ரக்பி குழுவை தயார் படுத்துவதற்கும் மாநில அளவிலான வில்வித்தை போட்டியை நடத்துவதற்கும் எம்.பி.ஐ. 20,000 வெள்ளி செலவிடப்பட்டது என்றார் அவர்.
காஜாங் நகராண்மைக் கழக அரங்கில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி நேற்று வரை நடைபெற்ற 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய வில்வித்தைப் போட்டியின் முதலாவது தொடர் நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில வில்வித்தை விளையாட்டாளர்களுக்கு ஏற்பாட்டு ஆதரவு வழங்குவது உள்பட இந்த ஆறு நாள் போட்டியை நடத்துவதற்கு எம்.பி.ஐ. 15,000 வெள்ளியை செலவிட்டது என்றும் அவர் சொன்னார்.


