ஷா ஆலம், பிப் 6- வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குப்பைகளை கல்வாய்களுக்கு அருகில் கொட்டுவதை தவிர்க்கும்படி கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மேண்ட் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
வெள்ளத்திற்கு பிந்தைய இரண்டாம் கட்டத் துப்புரவுப் பணிகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதில் பொது மக்களின் ஒத்துழைப்பு தங்களுக்கு மிகவும் தேவைப்படுவதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.
இவ்வாறு வீசப்படும் குப்பைகள் மழை காலத்தின் போது கல்வாய்களுக்கு அடித்துச் செல்லப்பட்டு திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கு வழி வகுக்கும் என்று அவர் சொன்னார்.
வெள்ளத்திற்கு பிந்தைய குப்பைகளை பொது மக்கள் இனியும் வீசமாட்டார்கள் என எதிர்பார்க்கிறோம். கால்வாய்கள் மற்றும் நீரோடைகளை சுத்தம் செய்வதை இலக்காக கொண்ட இரண்டாம் கட்டத் துப்புரவுப் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறோம் என்றார் அவர்.
அண்மைய காலங்களில் குறிப்பாக சீனப்புத்தாண்டிற்குப் பின்னர் திடக்கழிவுகளை பொது மக்கள் வீசுவது எங்கள் கண்காணிப்பின் வழி தெரிய வந்துள்ளது. அத்தகைய குப்பைகளை ரோ ரோ எனப்படும் குப்பைத் தோம்புகளில் வீசும்படி கேட்டுக் கொள்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
குப்பைகளை அகற்றும் பணி இன்னும் முற்றுப் பெறாததால் கடுமையாக மழை பெய்யும் பட்சத்தில் மறுபடியும் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்று அவர் கூறினார்.
தாமான் ஸ்ரீ மூடாவில் இன்று மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான துப்புரவு இயக்கத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


