கோலாலம்பூர், பிப் 6- கிள்ளான் பள்ளத்தாக்கு நோக்கி வரும் பல நெடுஞ்சாலைகளில் இன்று மாலை வாகனப் போக்குவரத்து மெதுவாகவும் நெரிசல் நிறைந்தும் காணப்படுகிறது. சீனப்புத்தாண்டு விடுமுறை முடிந்து பலர் தலைநகரம் திரும்பும் காரணத்தால் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பினாங்கில் ஜூரு டோல் சாவடி தொடங்கி தெற்று நோக்கி செல்லும் தடத்திலும் தைப்பிங் முதல் பீடோர் வரையிலான பகுதியிலும் நெரிசல் காணப்படுவதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் பேச்சாளர் கூறினார்.
தலைநகர் நோக்கிச் செல்லும் தடத்தில் கோம்பாக் டோல் சாவடிக்கு முன்பாக போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாகவும் அவர் சொன்னார்.
புக்கிட் திங்கி-கெந்திங் செம்பா சாலையின் 41.3வது கிலோமீட்டரில் கார் ஒன்று தீப்பற்றிக் கொண்டது. இதனால் அச்சாலையின் அவசரத் தடம் மூடப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த நெடுஞ்சாலை நெடுகிலும் குறிப்பாக காராக் மற்றும் கோல திரங்கானு டோல் சாவடியில் போக்குவரத்து சீராக உள்ளதோடு நாட்டின் தென் பகுதிகளில் சுங்கை பீசி மற்றும் ஸ்கூடாய் டோல் சாவடிகளும் போக்குவரத்து நெரிசலின்றி காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.


