ஷா ஆலம் பிப் 4- வரும் ஞாயிறன்று தாமான் ஸ்ரீ மூடாவில் மேற்கொள்ளப்படவிருக்கும் வெள்ளத்திற்கு பிந்தைய துப்புர இயக்கத்தில் கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மேண்ட் நிறுவனத்தின் 100 ஊழியர்கள் பங்கேற்கவுள்ளனர்.
கால்வாய்கள் மற்றும் நீரோடைகளில் காணப்படும் அடைப்புகளை சரி செய்வது மற்றும் இன்னும் அகற்றப்படாமலிருக்கும் குப்பைகளை துப்புரவு செய்து ஆகியப் பணிகளை மையமாக கொண்டு இந்த இயக்கம் மேற்கொள்ளப்படும் என்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.
இந்த துப்புரவுப் பணியை சீராக மேற்கொள்வதற்கு ஏதுவாக வட்டார மக்கள் தங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமாய் அவர் கேட்டுக் கொண்டார்.
வீடுகளில் இன்னும் காணப்படும் வெள்ளத்திற்கு பிந்தைய குப்பைகளை பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றும் பட்சத்தில் அவற்றை அகற்றும் பணியை தங்களால் எளிதாக மேற்கொள்ள முடியும் என அவர் சொன்னார்.
இவ்விவகாரத்தில் ஸ்ரீ மூடா மக்களின் ஒத்துழைப்பு நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம். திடக்கழிவுகளை அகற்றுவதற்கான காலக் கெடு முடிந்து விட்ட போதிலும் அவற்றை துப்புரவு செய்வதில் உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார் அவர்.
சிலாங்கூர் மாநிலத்தில் குப்பைகளை அகற்றும் பணிக்கு பொறுப்பேற்றுள்ள கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மெண்ட் நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி முதல் வெள்ளத்தால் குவிந்த குப்பைகளை அகற்றும் பணியை கட்டங் கட்டமாக மேற்கொண்டு வருகிறது.


