ALAM SEKITAR & CUACA

வெள்ளத்திற்கு பிந்தைய குப்பைகளை அகற்றும் பணி ஞாயிறு வரை நீட்டிப்பு

21 ஜனவரி 2022, 12:22 PM
வெள்ளத்திற்கு பிந்தைய குப்பைகளை அகற்றும் பணி ஞாயிறு வரை நீட்டிப்பு

ஷா ஆலம், ஜன 21- வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை வெளியேற்றுவதற்கு ஏதுவாக குப்பைகளை அகற்றும் பணியை கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் வரும் ஞாயிற்றுக் கிழமை வரை நீட்டித்துள்ளது.

வெள்ளத்திற்கு பிந்தைய குப்பைகளை அகற்றும் பணியை கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமையுடன் முடிவுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்த போதிலும் சாலையோரங்களில் அத்தகைய குப்பைகள் இன்னும் காணப்படுவதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.

இம்மாதம் 7 ஆம் தேதி முதல் இதுவரை சுமார் 3,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக கூறிய அவர், துப்புரவுப் பணிகள் இரண்டாம் கட்டத்தில் நுழைந்துள்ள நிலையில் அகற்றப்பட வேண்டிய குப்பைகள் இன்னும் அதிகமாக உள்ளது என்றார்.

ஆகவே, அனைத்து குப்பைகளையும் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் அப்புறப்படுத்தி விடும்படி பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம். அதற்கு பின்னரும் இத்தகைய குப்பைகள் காணப்படும் பட்சத்தில் அவற்றை சட்டவிரோத குப்பைகளாக கருத வேண்டி வரும் என்றார் அவர்.

வெள்ளத்திற்கு பிந்தைய குப்பைகள் அகற்றும் பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியுள்ள காரணத்தால்  இம்மாதம் 8 ஆம் தேதி தொடங்கப்பட்ட இரண்டாம் கட்ட துப்புரவுப் பணியை மேற்கொள்வதில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

கால்வாய்கள் மற்றும் நீரோடைகளை சுத்தம் செய்வது மற்றும் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பது ஆகிய பணிகளை இரண்டாம்  கட்ட துப்புரவு இயக்கம் இலக்காக கொண்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.