கிள்ளான், ஜன 16- பொங்கல் திருநாளை முன்னிட்டு செந்தோசா தொகுதியைச் சேர்ந்த 50 பேருக்கு உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.
குறைந்த வருமானம் பெறும் தரப்பினர், மூத்த குடிமக்கள் மற்றும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.
ஒவ்வொருவருக்கும் 45 வெள்ளி மதிப்பிலான அரிசி, கனிம நீர், சவர்க்காரம், வாளி உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
வெள்ளத்தினால் கடும் பாதிப்பை எதிர்நோக்கியிருக்கும் மக்களின் சுமையை குறைப்பதில் இந்த உதவி ஓரளவு துணை புரியும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.
இதனிடையே, இந்த உதவிப் பொருள்களை வழங்கிய தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக எஸ்.லோகேஸ்வரன் (வயது 40) கூறினார்.
இந்த உதவிக்காக டாக்டர் குணராஜ் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வெள்ளத்தினால் பொருள்களுக்கு ஏற்பட்ட இழப்பை இந்த உதவி ஓரளவு சரி செய்யும் என்றார் அவர்.
மக்கள் நலனில் பரிவு கொண்டு இத்தகைய உதவிகளை தொடர்ந்து வழங்கி வரும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கே. வசந்தி (வயது 58) என்ற மாது தெரிவித்தார்.
இதனிடையே இந்த பொங்கல் விழா குறித்து கருத்துரைத்த டாக்டர் குணராஜ் நாடு பெருந்தொற்று கட்டத்தில் தொடர்ந்து இருந்து வந்த போதிலும் இந்துக்கள் இத்தகைய விழாக்களை கொண்டாடுவதில் எந்த இடையூறும் ஏற்படவில்லை என்று சொன்னார்.
கடந்த ஓராண்டு காலமாக நாம் அனுபவித்து வரும் பலன்களுக்கு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.


