ECONOMY

போலி தடுப்பூசி சான்றிதழைப் பயன்படுத்திய தம்பதியர் கைது

14 ஜனவரி 2022, 7:53 AM
போலி தடுப்பூசி சான்றிதழைப் பயன்படுத்திய தம்பதியர் கைது

அலோர் காஜா, ஜன 14- மைசெஜாத்ரா செயலி வழி போலியான கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழைப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் அரசு ஊழியர்களான கணவன்-மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 38 மற்றும் 33 வயதுடைய அத்தம்பதியினர்  கைது செய்யப்பட்டதாக அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். அர்ஷாட் அபு கூறினார்.

இந்த போலி சான்றிதழைப்  விற்பது மற்றும் பதவிறக்கம் செய்வதில் இடைத்தரகராக செயல்பட்டதாக நம்பப்படும் 58 வயது ஆடவர் ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்தம்பதியினருடன் ஒரே அலுவலகத்தில் பணியாற்றி வரும் அந்த ஆடவர் உள்ளிட்ட அம்மூவரும் கடந்த செவ்வாய்க் கிழமை நான்கு மணியளவில் அலோர் காஜா மாவட்ட  போலீஸ் தலைமையகத்தில் கைது செய்யப்பட்டன என அவர் சொன்னார்.

அத்தம்பதியரின் தடுப்பூசி சான்றிதழ் நம்பகத்தன்மை மீது சந்தேகம் கொண்ட சம்பந்தப்பட்ட அரசு துறையின் இயக்குநர், அவ்விருவரின் சான்றிழையும் சோதிக்கும்படி கடந்த மாதம் 30 ஆம் தேதி நிர்வாக சேவை பிரிவுக்கு உத்தரவிட்டார்.

அந்த அலுவகத்தின் நிர்வாக சேவைப் பிரிவினர் ரெம்பியா சுகாதார மையத்தை தொடர்பு கொண்ட போது அத்தம்பதியர் சம்பந்தப்பட்ட கிளினிக்கில் தடுப்பூசி பெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது அர்ஷாட் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இரண்டு டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளதைக் காட்டும் இலக்கவியல் தடுப்பூசி சான்றிதழை பெறுவதற்கு சக பணியாளர் ஒருவருக்கு அத்தம்பதியர் தலா 500 வெள்ளியை வழங்கியுள்ளது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் அவர் சொன்னார்.

தடுப்பூசி பெறாத பட்சத்தில் பணியிடத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாமலிருப்பதற்கும் பொது இடங்களில் தடையின்றி நுழைவதற்கும் போனஸ் உள்ளிட்ட சலுகைகைளை பெறுவதற்காக அவர்கள் இந்த போலி தடுப்பூசி சான்றிதழை வாங்கியுள்ளனர் என்றார் அவர்.

கோவிட்-19 தடுப்பூசியை தாங்கள் பெறப்போவதில்லை என்று அத்தம்பதியர் கடந்தாண்டு மத்தியில் போலீசில் புகார் செய்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.