MEDIA STATEMENT

தேசிய கால்பந்து குழுவின் முன்னாள் பயிற்றுநர் டத்தோ எம். குப்பன் காலமானார்

31 டிசம்பர் 2021, 8:20 AM
தேசிய கால்பந்து குழுவின் முன்னாள் பயிற்றுநர் டத்தோ எம். குப்பன் காலமானார்

கோலாலம்பூர், டிச 31- முன்னாள் கால்பந்து விளையாட்டாளரும் தேசிய கால்பந்து அணியின் முன்னாள் பயிற்றுநருமான டத்தோ எம். குப்பன் நேற்று மாலை காலமானார். அன்னாருக்கு வயது 85.

மறைந்த டத்தோ குப்பனின் நல்லுடல் பினாங்கு, பட்டர்வெர்த்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்று மலேசிய கால்பந்து சங்கம் ஓர் அறிக்கையில் கூறியது.

அறுபதாம் ஆண்டுகளில் தேசிய கால்பந்து குழுவை பிரதிநிதித்து விளையாடிய டத்தோ குப்பன், எழுபதாம் ஆண்டுகளில் தேசிய குழுவின் பயிற்றுநராக பொறுப்பு வகித்து வந்தார்.

கடந்த 1936 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி புக்கிட் மெர்தாஜாமில் பிறந்த அவர், கால்பந்தாட்டத்தில் முன்னணி தாக்குதல் ஆட்டக்காரராக விளங்கிய காரணத்தால் “பினாங்கு கருஞ்சிறுத்தை“ மற்றும் “ஜேக்பூட்ஸ்“ என்ற அடை மொழியுடன் அழைக்கப்பட்டார்.

தனது 19 வது வயதில் அவர் பினாங்கு குழுவை பிரதிநிதித்து விளையாடத் தொடங்கினார். அக்குழுவில் அவர் முன்னணி தாக்குதல் ஆட்டக்காரராக விளங்கினார். பின்னர் சூ செங் கியு தலைமையிலான தேசிய குழுவில் இடம் பிடித்து 1958, 1959 மற்றும் 1961 இல் தேசிய அணி மெர்டேக்கா  கிண்ணத்தை வெல்வதற்கும் உறுதுணையாக இருந்தார்.

அன்றைய தேசிய கால்பந்து குழுவின் முன்னணி ஆட்டக்கராராக விளங்கிய டத்தோ குப்பன், கடந்த 1961 ஆம் ஆண்டு சியாப் கிண்ணத்தை வென்ற தேசிய குழுவிலும் இடம் பெற்றிருந்தார்.

கடந்த 1972 இல் கால்பந்து பயிற்றுநர் பயிற்சியை பெற்றதைத் தொடர்ந்து பயிற்றுநராக பணியை அவர் தொடக்கினார். 1974 இல் மலேசிய கிண்ணத்தை பினாங்கு வெல்வதற்கு இவர் முக்கியப் பங்கினை ஆற்றினார்.

பணி ஓய்வு பெற்றப் பின்னர் புளு கிராஸ் கால்பந்து குழுவை உருவாக்கி வழி நடத்தி வந்த இவர், பிந்தாங் பீரு கால்பந்து அகாடமியின் ஆலோசகராகவும் விளங்கினார்.

தேசிய கால்பந்து குழுவை மீண்டும் வழி நடத்த டத்தோ குப்பனுக்கு கடந்த 1998 ஆம் ஆண்டில் வாய்ப்பு வழங்ப்பட்டது. எனினும் அந்த வாய்ப்பை அவர் நிராகரித்ததைத் தொடர்ந்து அப்பொறுப்பு ரிட்டர்ட் பேட்டுக்கு வழங்கப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.