ஷா ஆலம், டிச 27- வெள்ளம் ஏற்படாத தொகுதிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகின்றனர்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் உதவிப் பொருள் சேகரிப்பு மையத்தை தனது தொகுதியில் தொடக்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருள்களை பொதுமக்கள் வழங்கி உதவுவதற்கு ஏதுவாக இந்த திட்டத்தை அவர் அமல்படுத்தியுள்ளார்.
மெத்தைகள், உணவுப் பொருள்கள், குழந்தைகளுக்கான பெம்பர்ஸ், ரொட்டி, பிஸ்கட் போன்ற பொருள்களை தாங்கள் பாதிக்கப்பட்டவர்களக்கு விநியோகித்து வருவதாக ஜமாலியா சொன்னார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக பொருள்களை கொடுத்து உதவிய நல்லுள்ளங்களுக்கு நன்றி தாம் பெரிதும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட இடங்களில் துப்புரவுப் பணியில் தொகுதி சேவை மையம், உயர்கல்விக் கூடங்கள் மற்றும் கெஅடிலான் இளைஞர் பிரிவைச் சேர்ந்த 30 தன்னார்வலர்கள் வீடுகளைக் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாக ரவாங் உறுப்பினர் சுவா வேய் கியாட் தெரிவித்தார்.
கிள்ளான் வட்டாரத்தில் குறிப்பாக கம்போங் சுங்கை பினாங்கில் இந்த துப்புரவு இயக்கத்தின் மூலம் 50 வீடுகளைச் சுத்தம் செய்தோம் என்றார் அவர்.


