கோலாலம்பூர், டிச 11 - மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாகக் கூறப்படும் இரண்டு காணொளிகளில் இருக்கும் நான்கு நபர்கள் இன்று செந்தூல் மாவட்ட காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அந்த நான்கு சந்தேக நபர்களையும் விசாரணை அதிகாரியால் நேற்று
தொடர்பு கொள்ள முடிந்ததாக செந்தூல் போலீஸ் தலைவர் ஏசிபி பெ எங் லாய் கூறினார்.
இன்று அவர்கள் தங்கள் வாக்குமூலங்களை பதிவு செய்ய போலீஸ் நிலையத்திற்கு வருவார்கள் என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.
பொது அமைதியை மீறும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு புரிந்ததாக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 504 இன் கீழும் இணைய சேவையை தவறான முறையில் பயன்படுத்தியதற்காக தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233 இன் கீழும் இச்சம்பவம் குறித்து விசாரிக்கப்படுவதாக அவர் சொன்னார்.
மாற்றுத் திறனாளிகளை ஏளனப்படுத்தியது தொடர்பில் ஒ.கே.யு. சென்ட்ரல் தலைவர் செனட்டர் டத்தோ ராஸ் அடிபா ரட்ஸி கடந்த வியாழனன்று போலீசில் புகார் செய்திருந்தார்.
இரண்டு இளைஞர்கள் மாற்றுத் திறனாளி போல் நடித்து மாற்றுத்திறனாளிகளுக்கான வாகன நிறுத்துமிடத்தை வெற்றிகரமாகப் பெற்றதாக காணொளி ஒன்றில் பெருமையாகக் கூறிக் கொண்டனர்.
ஆனால் சமூக வலைத்தளவாசிகளின் எதிர்மறையான கருத்துகளைத் தொடர்ந்து அவ்விரு இளைஞர்களும் மன்னிப்பு கோரும் மற்றொரு வீடியோவை வெளியிட்டனர்.
மற்றொரு வீடியோவில், பெட்ரோல் நிலையத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறையைப் பயன்படுத்தும் போது இரண்டு பெண்கள் மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்துவதைக் காண முடிந்தது.
ECONOMY
மாற்றுத் திறனாளிகள் அவமதிப்பு- நால்வரிடம் போலீஸ் இன்று வாக்கு மூலம் பதிவு
11 டிசம்பர் 2021, 1:17 PM


