ஷா ஆலம், டிச 3- சிலாங்கூரில் கடந்த 2020 ஆம் ஆண்டு 1,843 கோடி வெள்ளியை உட்படுத்திய 324 தொழிற்சாலைத் திட்டங்களுக்கு மீடா எனப்படும் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அங்கீகாரம் அளித்துள்ளது.
அங்கீக்கப்பட்ட திட்டங்களில் 93 விழுக்காடு அமலாக்கம் கண்டு விட்டதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.
எஞ்சிய 7 விழுக்காட்டுத் திட்டங்கள் திட்டமிடல், தொழிற்சாலை நிர்மாணிப்பு மற்றும் இயந்திரங்களைப் பொறுத்தும் கட்டத்தில் உள்ளதாக அவர் சொன்னார்.
அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் செயல்வடிவம் காண்பதை உறுதி செய்வதற்காக சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்களுடன் தொடர்ந்து கலந்துரையாடல் நடத்துவது மற்றும் எழுகின்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது போன்ற பணிகளை இன்வெஸ்ட் சிலாங்கூர் வாயிலாக மாநில அரசு மேற்கொண்டு வருகிறது என அவர் குறிப்பிட்டார்.
மாநில சட்டமன்றத்தில் நேற்று கடந்த 2020இல் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சாலைத் திட்டங்கள் தொடர்பில் ஆயர் தாவார் உறுப்பினர் டத்தோ ரிஸாம் இஸ்மாயில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
முதலீட்டாளர்கள் தங்களின் மூதலீட்டுத் திட்டத்திலிருந்து பின்வாங்காமலிருப்பதை உறுதி செய்வதற்கான கால வரம்பு எதனையும் மாநில அரசு நிர்ணயிக்க்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


