ஷா ஆலம், டிச 2- இலவச குடிநீர் விநியோகத் திட்டத்தில் மேலும் அதிகமானோர் கொண்டு பயன் பெறுவதை ஊக்குவிக்கும் நோக்கில் “ஸ்கிம் ஆயர் டாருள் ஏசான்“ திட்டத்தை பிரபலப்படுத்தும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் 620,000 பேர் பங்கேற்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வரை 287,181 பேர் அல்லது 46 விழுக்காட்டினர் மட்டுமே விண்ணப்பம் செய்துள்ளதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.
இத்திட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்பதற்கு ஏதுவாக அதன் பதிவு நடவடிக்கை ஆண்டு முழுவதும் நடைபெற்று வருவதோடு அடுத்தாண்டிலும் அது தொடரவுள்ளது. எனினும், 287,181 பேர் மட்டுமே இத்திட்டத்திற்கு இதுவரை பதிந்துள்ளது வியப்பை அளிக்கிறது என்றார் அவர்.
இந்த இலவ நீர் விநியோகத் திட்டத்தில் மேலும் அதிகமானோர் பங்கேற்பதை உறுதி செய்வதற்காக பிரசார நடவடிக்கைகளை நாங்கள் மேலும் தீவிரமாக மேற்கொள்ளவுள்ளோம் என்று மாநில சட்டமன்றத்தில் அவர் தெரிவித்தார்.
இந்த இலவச நீர் விநியோகத் திட்டத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை குறித்து சிஜங்காங் தொகுதி உறுப்பினர் டத்தோ டாக்டர் யூனுஸ் ஹைரி எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.
இந்த “ஸ்கிம் ஆயர் டாருள் ஏசான்“ எனும் திட்டம் 4,000 வெள்ளிக்கும் குறைவாக குடும்ப வருமானத்தைக் கொண்ட தரப்பினரை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.
தகுதி உள்ளவர்கள் https://ssipr-daftar.selangor.gov.my/register எனும் அகப்பக்கம் வாயிலாக இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம்.


