ஷா ஆலம், டிச 2- இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் பொது இடங்களில் சுற்றித் திரிந்த 1,898 பிராணிகள் பிடிபட்டன.
பிடிபட்ட பிராணிகளில் 1,817 நாய்கள், 75 குரங்குகள், 6 பன்றிகள் ஆகிவையும் அடங்கும் என்று சுற்றுச் சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.
பொது மக்களுக்கு தொந்தரவு ஏற்படுவதை தடுப்பதற்காக சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் துறையின் கைவிடப்பட்ட பிராணிகள் கட்டுப்பாட்டு பிரிவு குரங்களைப் பிடிப்பதற்கு 26 கூண்டுகளை தயார் செய்திருந்ததாக அவர் சொன்னார்.
நாய்களை பிடிக்கும் பணி தினசரி மேற்கொள்ளப்படுகிறது. கிராமப் புறங்களில் இத்தகைய புகார்கள் வரும் பட்சத்தில் அங்கு கிராமத் தலைவர்களின் உதவியுடன் கூண்டுகள் வைக்கப்படுகின்றன என்று அவர் மேலும் சொன்னார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று கைவிடப்பட்ட விலங்குகளைப் பிடிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஈஜோக் உறுப்பினர் டாக்டர் இட்ரிஸ் அகமது எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிடிபடும் பிராணிகள் வன விலங்கு பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


