ஷா ஆலம், நவ25;- அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்த தகவல்கள் சமூகத்தின் அனைத்து நிலையிலான மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய மொழியில் விளக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பல்லின மற்றும் சமயங்களைச் சேர்ந்த மக்களைக் கொண்டுள்ளது சிலாங்கூரின் அதிமுக்கிய அம்சமாக விளங்குவதாக சமூக மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
பல இன மற்றும் சமயங்களைச் சேர்ந்த மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது மலேசியாவுக்கு குறிப்பாக சிலாங்கூருக்கு சவால்மிகுந்த விஷயமாக உள்ளது என்று அவர் சொன்னார்.
பொருளாதாரம் மற்றும் அரசியல் மேம்பாட்டிற்கு முன்னணி மாநிலமாக விளங்கும் சிலாங்கூர் ஒற்றுமையை உறுதி செய்யும் கடப்பாட்டையும் கொண்டுள்ளது. இதன் வழி இலக்கவியல் யுகத்தின் சவால்களை எதிர்கொள்ளவும் அந்நிய முதலீடுகளைப் பெறவும் இயலும் என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று இங்கு நடைபெற்ற 2021 ஆண்டிற்கான சிலாங்கூர் மாநில சமயங்களுக்கிடையிலான மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இதனைக் தெரிவித்தார்.
இயங்கலை வாயிலாக நடைபெற்ற இந்த மாநாட்டை மாநில செயலாளர் டத்தோ ஹாரிஸ காசிம் தொடக்கி வைத்தார்.
நல்லிணக்கத்திற்கான இலக்கை அடைவதற்காக சிலாங்கூர் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக டாக்டர் சித்தி மரியா சொன்னார். அரசாங்கத் துறைகள், கல்வி நிலையங்கள், சமூக மற்றும் அரசு சாரா அமைப்பகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும் அந்நடவடிக்கைகளில் அடங்கும் என்றார் அவர்.


