ஷா ஆலம், நவ 23- டீம் சிலாங்கூர் ஏற்பாட்டில் நடைபெற்ற சேஹாட் செமினி எனும் சுகாதார பாதுகாப்பு இயக்கம் நடைபெற்றது. இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இரத்ததான இயக்கத்தில் 86 பை இரத்தம் சேகரிக்கப்பட்டது.
இந்த இரத்தத்தைக் கொண்டு 110 நோயாளிகளைக் காப்பாற்ற முடியும் என்று டீம் சிலாங்கூர் திட்ட இயக்குநர் ஷிஹாய்செல் கெமான் கூறினார்.
தேசிய இரத்த வங்கிக்கு உதவும் நோக்கில் இந்த இரத்த தான நிகழ்வை நாங்கள் நடத்தினோம். இதன்வழி இந்த இரத்தத்தை இதர மருத்துவமனைகளுக்கு பகிர்ந்தளிப்பதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்றார் அவர்.
சமூகத்திற்கு நன்மை பயக்கக்கூடிய இத்திட்டத்தை தொடர்ந்து நடத்துவதற்கு தாங்கள் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.
காஜாங் நகராண்மைக் கழகத்தின் 20 வது பிரிவு, உலு லங்காட் சுகாதார இலாகா, தேசிய இரத்த வங்கி, பிடாரி அரசு சாரா இயக்கம், தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவனம் மற்றும் செமராக் சங்கம் ஆகிய தரப்பினருடன் இணைந்து இந்த இயக்கம் மேற்கொள்ளப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
இரத்த தான இயக்கம் தவிர்த்து பொதுமக்கள் மத்தியில் ஆரோக்கியத்தின் முக்கியத்துவதை உணர்த்தும் வகையில் சுகாதார கண்காட்சியும் நடத்தப்பட்டது என அவர் சொன்னார்.


