ஷா ஆலம், நவ 22- கோவிட்-19 நோய்த் தொற்று காலத்தில் பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் லைசென்ஸ் இன்றி வர்த்தகம் புரிந்து வந்த 49 பேருக்கு தற்காலிக வர்த்தக உரிமம் வழங்கப்பட்டது.
பொருளாதார நெருக்குதல் மற்றும் வருமானம் ஈட்ட வேண்டிய நிர்பந்தம் காரணமாக இம்மாவட்டத்தில் லைசென்ஸ் இன்றி வணிகம் புரிவோர் எண்ணிக்கை உயர்வு கண்டதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டத் தரப்பினருக்கு தற்காலிக லைசெஸ் வழங்கப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் கூறியது.
பெருந்தொற்று பரவல் பொருளாதார நிலைத்தன்மைக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் பொதுமக்கள் குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் வருமான இடைவெளியையும் அதிகரிக்கச் செய்துள்ளது என்று மாநகர் மன்றம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.
இத்தகைய தரப்பினர் வியாபாரம் செய்தவற்கு ஏதுவாக 51 வர்த்தக இடங்களை மாநகர் மன்றம் தயார் செய்துள்ளதாவும் ஒரே இடத்தில் வெவ்வேறு நேரங்களில் ஒருவருக்கும் மேற்பட்டவர் வியாபாரம் செய்வதற்குரிய வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் அது குறிப்பிட்டது.
அந்த இடங்களில் காலை 6.00 மணி முதல் காலை பத்து மணி வரையிலும் காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் மாலை 6.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரையிலும் வியாபாரம் செய்ய முடியும் எனவும் அது கூறியது.


